Friday, 28 September 2012


விசுவாசம் என்பது இறை சார்ந்தது,
மதம் சார்ந்ததல்ல !
இதை விடச் சிறந்த விசுவாசக் கதை ஒன்றை நான் வாசித்ததேயில்லை எனுமளவுக்கு எனை ஈர்த்த கதை யோபுவின் கதை. விசுவாசத்தின் நீள, அகல, ஆழ, உயரங்களைத் தொட்டவர் யோபு. அவருடைய சிலிர்ப்பூட்டும் கதை இதோ கவிதை வடிவில் முதன் முதலாக.
அன்புடன்
சேவியர்.

யோபு – 1
0
ஊசு என்றொரு நாடு,
அங்கே தான் இருந்தது
யோபுவின் வீடு.
யோபு,
விடாப்பிடி விசுவாசத்தின்
விளக்கமான விளக்கு.
ஒவ்வோர் நிகழ்வின்
ஆழத்திலும்
ஆண்டவன் இருப்பதை
அணுக்களெங்கும் அறிந்தவன்.
அவர் தம் திருப்பெயரை
உள்ளமெங்கும் அணிந்தவன்.
திறமை திணித்த
ஏழு புதல்வர்களும்,
அழகு வடித்த
மூன்று புதல்வியரும்,
அந்த சத்தியவானின் சந்ததியர்.
யோபு,
செல்வத்தின் கூரைகளில்
நிழல் காய்பவர்.
வெப்பத்தின் வேகத்தையும்
வெளியே தள்ளும்
பணக்காரன்.
பிள்ளைகள் செய்யும்
தவறுகளுக்காய்,
ஆண்டவரிடம் மண்டியிடும்
மகத்தானவன்.
ஏழாயிரம் ஆடுகள்,
மூவாயிரம் ஒட்டகங்கள்,
ஐநூறு காளைகள்,
ஐநூறு கழுதைகள்,
ஏராளமான பணியாட்கள் என,
சந்துகளிலும் செல்வத்தால்
செதுக்கப்பட்டவன்.
அத்தனை சொத்துக்கும்
ஆண்டவனே அதிபதியெனும்
திறந்த உள்ளத்துடன்
பிறந்த சிறந்தவன்.
அந்த பக்தியின் வெளிச்சம்
பரமனின் கண்களையே
கூசச் செய்ததுண்டு,
அந்த பிரமிப்புப் பணிவு
படைத்தவனை நிறையவே
பெருமிக்க வைத்ததுண்டு.
சோதனைத் தீயில் சுடாத
சத்தியங்கள் ஜெயிப்பதில்லையே.
ஓர் நாள்,
சாத்தான் ண்டவரிடம் வந்தான்.
கடவுள் கேட்டார்,
உலகைச் சுற்றி வந்தாயே
யோபுவைப் பார்த்தாயா ?
அவன்போல் நீதிமான்
பூவுலகில் இல்லை,
அவனுடைய பக்திக்கு
எல்லையென்பதில்லை,
மாசற்ற மனசுக்காரன்
அவன்
நேசத்தின் அசலானவன்,
கடவுள்
மனிதனை மெச்சுகிறார்.
சாத்தான் எப்போதும்
நல்லவற்றில் இருந்து
தீயவற்றை திரட்டத் துடிப்பவன்,
உலையில் போட்ட
அரிசிக்கு இடையிலும்
கல்லைத் தேடும் கலகக் காரன்.
சிரித்துக் கொண்டே
சாத்தான் சாதித்தான்.
சும்மா கிடக்கும் சங்கு
சத்தமிடுமா ?
நீர்
வாரி இறைக்கிறீர் அவனுக்கு,
அவன் நன்றி செய்கிறான்.
இது
ஒரு வித
கொடுக்கல் வாங்கல்.
கொடுக்காமல் வாங்க இயலுமா ?
மழையை நிறுத்தி வையும்,
பின்
அறுவடையை நிறுத்துப் பாரும்.
அவன்
சொத்துக்களின்
விலா எலும்பை திருடிப் பாரும்,
அவன்
உம்மைப் பழிப்பான்.
இருக்கும் வரை தான்
இறைவன்,
துன்பம் நிறைந்தால்,
அவன்
வந்தித்து வந்தவரையே
வகை வகையாய் நிந்திப்பான்.
ஆண்டவர் சாத்தானிடம்,
சத்தமிடாதே சாத்தானே.
இதோ,
அவன் சொத்துக்களை
நீ சிதைத்துக் கொள்
ஆனால்
அவனை மட்டும் ஒன்றும் செய்யாதே.
வெட்ட வெட்ட முளைக்கும்
அவன் விசுவாசத்தை,
நீ
விழிகள் வியக்க
தரிசிக்கப் போகிறாய்.
போ,
உன் சோதனைக் கத்திகளை
கூர் தீட்டு,
அந்தக் கத்திகள்
உன் நெஞ்சம் நோக்கி
திரும்பும் நாள் தொலைவில் இல்லை.
உனக்கு தோல்வி தான்.
மறக்காதே,
யோபு விசுவாசத்தின் பிறப்பு
விசுவாசத்துக்கே அவனால் சிறப்பு.
சாத்தான் சிரித்தான்,
பொறுத்திருந்து பாரும்,
கழுத்தில் அழுத்தும் கத்தி
ஆண்டவனை அழைக்குதா
இல்லை
சத்தமாய் பழிக்குதா என்று.
ஓர்,
வெள்ளைப் புறாவை
வெட்டிச் சாய்க்கும் வேகத்தில்
சாத்தான் பறந்தான்.
தன்,
பக்தன் மேல் வைத்த
நம்பிக்கை உதடுகளால்
கர்த்தர் சிரித்தார்.

யோபு – 2
ஒரு நாள்,
யோபுவின்
புதல்வரும், புதல்வியரும்
மூத்த சகோதரன் வீட்டில்
மெத்த மகிழ்வில்
பந்தியில் பூத்திருந்தனர்.
சாத்தான் தன்
வேட்டையைத் துவங்கினான்.
ஓர் ஊழியன் விரைவாய் வந்து
யோபுவிடம் புலம்பினான்,
எருதுகள் மேயும் புல்வெளியில்,
நம்
கழுதைகள் காற்றுவாங்கும்
அந்த நேரத்தில்,
வந்தனர் கொடியோர்
கொன்றனர் ஊழியரை,
சென்றனர் செல்வங்களோடு.
நான் மட்டும் பிழைத்தேன்
செய்தி சொல்ல
உயிரைப் பிடித்து
உம்மிடம் ஓடி வந்தேன்.
அதிர்ந்த யோபு
நிமிரும் முன்
இன்னொருவன் வந்தான்.
ஐயா?
என்ன சொல்வேன்,
விண்ணிலிருந்து விழுந்த
நெருப்பு நாக்குகள்
நம்
ஆடுகளையும் மேய்ப்பர்களையும்
அழித்து விட்டதே.
இரண்டாவது அம்பு
பாய்ந்த கலக்கம்
ஒய்வதற்கும்,
மற்றொருவன் வந்தான்
மூச்சிரைக்க…
ஐயா,
கல்தேயக் கள்வரிடம்
ஒட்டகங்கள்
சென்று விட்டன.
போரிட்ட வீரர்களை
வாள் முனைகள் தின்று விட்டன…
அத்தனை செல்வங்களும்
அழிந்தனவா ?
யோபு நிலை குலைந்தான்.
அவன் நடுங்கிய விரல்களில்
நறுக்கென்று
வேல் குத்தினான்
வேலையாள் ஒருவன்.
பூவிழுந்து வந்த காலில்
காய் விழுந்ததாய்
கவலைப்பட்டவனுக்கு,
தலையில்
மரம் விழுந்ததாய் வந்தது
அந்த மரணச் செய்தி.
பிள்ளைகள் இருந்த
மகிழ்வின் வீடு,
சூறாவளியில் கைகளால்
கொடூரமாய் உலுக்கப் பட்டு,
உதிர்ந்து விழுந்தனவாம்
உயிர்கள்.
எவரும் மிஞ்சவில்லை
சேதி சொல்ல வந்த
வேலையாளைத் தவிர.
யோபு அதிர்ந்தான்,
நட்சத்திரங்களோடு
நடந்தவன் மீது
எரிகற்கள் எறிந்து விளையாடியது
சாத்தான்.
தென்றலோடு உறங்கியவனுக்குள்
எரிமலை இறங்கியது,
மகிழ்வோடு மயங்கியவனுக்குள்
சோகங்கள் வந்து அடங்கியது.
இருந்தாலும் யோபு
விசுவாசத்தை கிழித்து
கண்ணீர் துடைக்கும்
கைக்குட்டை தயாரிக்கவில்லை.
கடல் நீரா
உப்புக்குக் கையேந்தும் ?
யோபுவா
ஆண்டவன் மீது
மறுப்புரை எழுதுவான் ?
கற்கள் தடுக்கியே
கண்டிராத கால்கள்
பாறை புரண்டதில் கொஞ்சம்
தடுமாறியதே தவிர
இடம் மாறவில்லை.
யோபு,
ஆடைகளைக் கிழித்தான்.
முற்றத்தில் மண்டியிட்டான்.
என் தாயின் கர்ப்பத்திலிருந்து
நான்
நிர்வாணியாய் வந்தேன்.
என்னை உடுத்தியவர் அவரே.
திரும்புகையிலும்
நான்
நிர்வாணியாகவே செல்வேன்.
ஆண்டவர் கொடுத்தார்,
அவரே எடுத்தார்.
அவர் பெயர் போற்றப்படட்டும்.
இதழ்கள் முழுதும்
அமிலம் தெளித்தும்,
இங்கே
ஒரு பூ வாசம் வீசுகிறது.
ம்,
அந்த வேர்கள்
தற்காலிக சுகங்களில்
தலைசாய்த்திருக்கவில்லை
ஆழமான விசுவாசத்தில்
ஆழப் புதைந்திருந்தது.
படைத்தவன் கண் பனித்தார்
சாத்தானைப் பார்த்து
மென்மையாய் புன்னகைத்தார்.
பார்,
அத்தனை சொத்தும்,
மகிழ்வின் அத்தனை அச்சும்
அழிக்கப்பட்டும்,
அவன் விசுவாசம் வாழ்கிறதே !
உன் தோல்வி,
அவன் நம்பிக்கையின் வெற்றி.
சாத்தான் சிலந்தி மாதிரி,
அவன்
வலை பின்னுவதை விலக்கவில்லை.
நீர்,
அவனுடைய
உடம்பின் மீது கைவைத்தால்
அவன்
விசுவாசம் அழுகி வீழும்.
தன் உடலினும் பெரிது
எவனுக்கும்
எதுவுமில்லையே.
சொத்துக்கள் எல்லாம் வருமானம்
சுகமான உடலே வெகுமானம்.
ஆண்டவர் அனுமதித்தார்.
அவன்
உயிரை விட்டுவிடு என்று
கட்டளையும் இட்டார்.
கூடுகளை எரித்த
தீய தீ,
இறக்கைகளை எரிக்க
புறப்பட்டது.
யோபுவின்
விசுவாசத்தின் வேர்களை
விசாரிக்கும்
இன்னோர்
விசாரணை அங்கே துவங்கியது.
யோபு – 3

யோபுவின்
பொன்மேனி முழுதும்
புண் விதைத்தான் சாத்தான்.
பூக்களின் இதழ்களில்
புதிதாய்
முட்கள் முளைத்தன.
ஓடுகளின் உதவியால்
புண் சொறிந்து,
ஓரமாய் கிடந்து
வருந்தினான் யோபு.
வலியில் பற்கள்
அவன் உடலைத் தின்று
பசியாறின.
ஆனாலும்
விசுவாசக் கிளைகளை
யோபு
விட்டு விடவில்லை.
மனைவி திட்டினாள்,
இன்னும் என்ன விசுவாசம் ?
சொத்துக்கள் சிதைந்தன
பிள்ளைகள் அழிந்தனர்
உம் உடலும்
புண் வந்து நொந்தது.
இன்னும் என்ன விசுவாசம் ?
நீ
அழியும் முன் ஓர் முறை
அவரை பழித்துக் கொள்.
காய்ந்த மரத்தில்
ஏன்
சிட்டுக்குக் கூடு ?
பச்சையம் இல்லா கிளைகளில்
ஏன் இன்னும்
நம்பிக்கை மொட்டுக்கள் ?
முதுகெலும்பாகய்
மாற வேண்டியவள்
கோடரிகளோடு
முன்னேறுகிறாள்.
யோபு அவளைத்
தடுத்தான்.
என்ன அறிவீனம் இது ?
சொத்துக்கள் தந்தபோது
வேண்டாம் என்று
வேண்டினாயா ?
பிள்ளைகள் வந்தபோது
போதும் என்று
புலம்பினாயா ?
வருகையில் மகிழ்ந்துவிட்டு
போகும் போது
புலம்புதல் நியாயமா ?
கால்வாய்கள் காய்ந்துவிட்டால்
கடல் வற்றி விடாது,
எத்தனை நதிகள்
நின்று போனாலும்
என் நம்பிக்கை கடல்
ஆழம் குறைக்காது.
யோபுவின் பக்தி
மனைவியை வதைத்தது
சோகத்தில் புதைத்தது.
ஏளனச் சிரிப்பை
எடுத்து வீசி விட்டு
நடந்து கடந்தாள்.
யோபுவின் நண்பர்
எலிப்பாசு,பிஸ்தாது,சோப்பார்
மூவரும்
துயரம் கேட்டு
பயணித்து வந்தனர்.
முக்காடிட்டு அழுவதைத் தவிர
வேறெதும்
செய்ய முடியவில்லை அவர்களால்.
புண்கள் வழிந்தாலும்
புண்ணியவானைப் புகழாமல்
இருக்க இயலவில்லை யோபுவால்.
நீண்ட நாட்களுக்குப் பின்…
வலி பிழிந்த வாழ்க்கையில்,
ஒரு நாள்
யோபுவின் வாயிலிருந்து
பழிச் சொல் ஒன்று
விழுந்தது.

யோபு – 4

அந்த பழிச் சொல்
ண்டவன் மீது விழவில்லை !!!
தான் பிறந்த அந்த
இருள் நாளின் மீதாய்
இருந்தது.
ஒழிக அந்த நாள்.
ஆண் மகவு
கருவுற்றதென்று சொன்ன
அந்த இரவு
உருத்தெரியாமல் உடையட்டும்.
நாள் காட்டியின்
நீள் முதுகிலிருந்து
அந்த நாள்
கீழே விழுந்து அழியட்டும்.
மாதங்களின் மடியில்
அது
சேராமல் மறையட்டும்.
கடவுளின் ஒளி
அந்த
இடர் தந்த
இருள் நாளின்
அடர் பள்ளத்தாக்கில்
விழாமல் கடக்கட்டும்.
சாவின் இருட்டும்,
கருமையின் நாக்குகளும்
அதைத் தின்று
ஏப்பமிடட்டும்.
அதன்
விடிகாலை விண்மீன்கள்
குருடாகிக் கிடக்கட்டும்,
அந்த
கீழ் வானம் அந் நாளில்
பாழடைந்தே கிடக்கட்டும்.
ஏனெனில்,
அந்த நாளில்
என் தாயின் கருவறை
அடைபடாமல் போயிற்றே !!!
என் இமைகளில் அவை
வேதனைகளை
இருத்தி விட்டு போயிற்றே.
கருப்பையில் நான்
கலைந்திருக்கக் கூடாதா ?
இல்லையேல்
வெளிப்பட்டதும் நான்
அழிந்திருக்கக் கூடாதா ?
நான் பிறந்ததும்
முழங்கால்கள் ஏன்
என்னை
ஏந்திக் கொள்ள
முன்வந்தன ?
என்
பசியின் நாக்குகளுக்கு
பால் ஏன்
பரிசளிக்கப் பட்டது ?
சாவைத் தேடும்
சந்ததியினரோடு
ஓர்
மீளாத் துயரில் நான்
மூழ்கியிருக்கக் கூடாதா?
கல்லறை தேடும்
கண்களுக்கு,
வாழ்வின் கைத்தடி ஏன்
வழங்கப் படுகிறது ?
மூச்சைத் தின்று
வேதனை வெள்ளத்தில்
அடித்துச் செல்லப்படுகிறதே
இந்த ஆன்மா !
நான் அஞ்சியது
என் மேல் அமிழ்த்துகிறது,
நான்
திகிலுற்ற நிகழ்வுகள்
என்னை
தின்கின்றன.
அல்லல் வந்து என்னை
அலைக்கழித்தபின்
நிம்மதி
ஓரமாய் நின்று
வேடிக்கை பார்க்கிறதே !.
யோபு
வேதனையின் உச்சத்தில்
எரிதழல் மீதமர்ந்த
எறும்பாய்,
கதறியபோது,
நண்பன் எலிப்பாசு
மெல்லமாய்
சொல்லத் துவங்கினான்.
சில
வாழ்வியல் தத்துவங்களை !
அவை
துளியில் துவங்கி
அருவியாய் அவதரித்தது

யோபு – 5

நண்பன் பேசினான்,
விசுவாச நீர் வார்க்கும்
மேகம் நீர்.
நீரே இப்படி
நிலைகுலையலாமா ?
தடுக்கி விழும் கால்களுக்கு
பாதமாய்
உருமாறியவர் நீர்,
சோகக் கரப்பான்
கால்களைச் சுற்றியதும்
களைத்து வீழலாமா ?
நல்லவர் எங்கேனும்
அழிந்தததாய்
அறிந்ததுண்டா ?
தீவினை விதைத்தவன்
நல்மணி அறுப்பதில்லை.
ஆண்டவன்
அக்கினியில்
தீயவன் தப்பியதில்லை.
என்றேனும் நீர்
செய்த தீமை இப்போது
தலையெடுக்கிறதா ?
யோசித்துப் பாரும்
யானையின் முழக்கமும்
சிங்கத்தின் கர்ஜனையும்
சதாகாலமும்
நீடிக்காது.
அவை நின்றே தீரும்.
படைத்தவனை விட
பரிசுத்தமானவன் யார் ?
தேவனை விட
தூய்மையானவன் யார் ?
புழுதிக் கால்களோடு
பிடைக்கும்,
அற்பமான அந்துப் பூச்சி
மானிடனின்
கூடாரக் கயிறுகள்
அறுக்கப்பட்டு நொறுக்கப்படும்.
நல்லவன் தலைகள்
தாக்குதலுக்குத் தப்பும்.
அறிவிலியைத் தான்
எரிச்சல்
எரிக்கும்,
பேதையைத் தான்
பொறாமை பிய்க்கும்.
அறிவிலியின் உடைமைகள்
அற்பத்தனமாய்
அழிக்கப்படும்,
மேல்நோக்கியே எரியும்
தீயைப் போல,
தீயவன் துன்பம் விரியும்.
நான்
கடவுளை நாடுவேன்.
ஆழம் காணா அற்புதங்களையும்
கரை காணா புதுமைகளையும்
எல்லையில்லாமல்
நல்குபவர் அவரே.
மண்ணின் வியர்வையை
மழையால் கழுவி,
வயல் முகத்தில்
புன்னகை பறிப்பவர் அவரே.
வறியவரை
வஞ்சகரின்
வாயெனும் வாளினின்று
காப்பவர் கடவுளே.
நல்லவற்றில்
நம்பிக்கை வைப்போரின்
வீட்டு
கொல்லைக்கப்பால்
அநீதி வாய் பொத்தி நிற்கும்.
கடவுள் திருத்தும் மனிதன்
பாக்கியவான்,
உன் பாத்திரத்துக் கசப்பு
தற்காலிகத் தைலம்.
களிம்பு தயாரித்தபின்
காயம் தருபவர் தான்
கடவுள்.
உனக்கு வலிமை தந்தபின்
வலிகள் தருகிறார்.
அழுகின்ற போது
ஆறுதல் தருவது
அவர் கரமன்றி வேறென்ன ?
உம்மைச் சூழ்ந்த
அத்தனை சோதனையும்
நீர்
வைக்கும் நம்பிக்கையில்
தீ விழுந்த
வைக்கோர் போராய்
கருகி மறையும்.
எல்லாம் உமக்கு
மீண்டும் வழங்கப்படும்.
பற்று
இற்றுப் போக வேண்டாம்.
கண்ணீர் காலத்தில்
காணாமல் போய்விடாமல்,
கண்ணீர் துடைக்கும்
வல்லமை சொல்லி
நின்றான் நண்பன்.

யோபு – 6

ஈரச் சிறகு
மெல்ல மெல்ல உலர்ந்து,
படபடக்கும்
மெல்லிய ஓர்
பட்டாம் பூச்சியாய்
பேசத் துவங்கினான் யோபு.
என் பதற்றமான
பேச்சுக்கு காரணம்
பாரமான என் வலிகளே.
என் மீது தைத்த
அம்புகளின் வீரியம்
எல்லையில்லா ஆழத்தில்
நீள்கிறது.
புல்லில்லா
காட்டுக் கழுதை
கத்துவது இயல்பு தானே.
உப்பின்றி தின்னும் பண்டம்
எச்சில் போல
எரிச்சல் தந்து,
அருவருப்பாய்
அருகிருக்கிறது எனக்கு.
முட்டையின் வெள்ளைக்கரு
என்ன சுவையை
தந்திட இயலும் ?
ஈசன்
என் வரத்தை
ஈந்திட மாட்டாரா ?
என்னை நசுக்கினாலோ,
உயிர் திருகி தண்டித்தாலோ
உடலை
இரண்டாய் துண்டித்தாலோ
நான் மிகவும் மகிழ்வேனே.
வெண்கலத்தின் வலிமை
என்
தோலுக்கு இல்லையே.
கல்லுக்கான உறுதி
என்
உள்ளுக்குள் இல்லையே.
உறைந்து போன
தண்ணீர் போல,
நின்று போயிற்று என் சொந்தம்.
வணிகர் கூட்டம்
அடிக்கடி வழியை மாற்றும்
என் சுற்றமும் அப்படியா ?
என்னை
உங்கள் கண்களின்
கருணைக் கருவிழியால் மட்டுமே
காணுங்கள்.
என் புலம்பல்களை
காற்றின் புலம்பலாய்
கணக்கிடாதீர்கள்.
என்றும் உங்கள்
செல்வம் நாடியோ,
உங்கள்
வல்லமை தேடியோ
படி கடந்ததில்லை நான்.
இப்போதும் நான் கேட்பதெல்லாம்
ஒன்றே.
நான் எங்கே தவறிழைத்தேன்
தெரிந்தால் சொல்லுங்கள்.
என் நெஞ்சுக்கு பக்கத்தில்
இன்னும்
நீதி விழித்திருப்பதாகவே
என்
உள் விளக்கு சொல்கிறது.